பங்கு சந்தை பாடம் சொன்னது - யாருக்கு?

பங்கு சந்தையை முதலீடு செய்யும் இடமாகவே பார்க்கவேண்டும். நான் முதலிலிருந்தே இதைத்தான் சொல்லிவருகிறேன். இரண்டு நாட்களாக சந்தை விழுந்து வருகிறது இந்நிலையில் இன்று காலை தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்ணுக்கு தென்பட்டது ‘நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு வைத்த பங்கு சந்தை - அசுரனின் பதிவு’ என ஆகா எதோ நமக்கு வேண்டிய மேட்டர்தான் போல என்ன இருக்குன்னு பாக்கலாம்னு போய் பாத்தேன் அந்த சுட்டில நீங்களும் பாருங்க. ஒவ்வொரு முறை சந்தை விழும்போதும் வரும் புலம்பல்தான் இது. இதற்கு நாம் பதில் சொல்வதை விட இன்று சந்தையே 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து பதில் சொல்லிவிட்டது.

இன்று தமிழ்மணத்தில் பார்த்த இன்னும் இரு பதிவுகளின் சுட்டி கீழே.

பங்குசந்தை விழும்போதெல்லாம் கும்மியடிக்கும் கம்யூனிஸ்ட்கள் – தமிழ்மணியின் பதிவு

பங்கு சந்தை இனி ரத்த ஆறு ஓடட்டும் – செல்வனின் பதிவு

இந்த சுட்டிகளெல்லாம் எதெற்கென்றால் எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு நம்மை கூர் தீட்டிக்கொள்ளத்தான்.

நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க
“தினைக்கும் பிச்சை போடுற wxyz இன்னைக்கு போடலை
என்னிக்குமே போடாத மஹாலட்சுமி நீ போட்ட” – அப்பிடின்னு அது போல சந்தை பணத்தை அள்ளிக்கொடுத்த போதெல்லாம் சத்தமில்லாமல் இருந்துவிட்டு சரியும் போது கூக்குரலிடுவது அபத்தமாக இல்லை?

2005 ஆகஸ்ட்டில் சென்செக்ஸ் 7000 புள்ளிகளை தாண்ட சிரமப்பட்டது அப்போது அதுதான் உச்சம் ஆனால் இன்றைய நிலையில் சென்செக்ஸின் உச்சம் 21000 அது சற்றே இறங்கி நேற்றைய முடிவு 16720 புள்ளிகள் இன்று காலையிலிருந்தே 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிவில் 811 புள்ளிகள் உயர்வாக 17540 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

ஏறுவதும் இறங்குவதும்தான் சந்தையின் இயல்பு. இந்த சரிவெல்லாம் தற்காலிகம்தான். 2005ல் முதலீடு செய்தவர்களுக்கு இப்போதைய சரிவு எப்படி பாதிக்காதோ அது போல முதலீட்டாளர்களை அது என்றுமே பாதித்ததில்லை பாதிக்கவும் பாதிக்காது. இழந்தது லாபத்தில் ஒரு சிறிய அளவே.

10% சந்தை சரிவதும் சந்தை 1 மணி நேரம் நிறுத்தப்படுவதும் முதல் தடவையா இல்லை இது கடந்த மூன்று வருடங்களிலேயே இது மூன்றாவது தடவை. எல்லா சரிவின் போதும் LIC, UTI மட்டுமே பங்குகளை வாங்கி சந்தையை தூக்கி நிறுத்தினால் சந்தை சரிவிற்கு அவர்களை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

தின வணிகத்தை சூதாட்டம் என்று சொன்னாலும் தின வணிகம் இல்லை என்றால் எல்லோரும் டீமேட் ஸ்டேட்மெண்டை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்க வேண்டியதுதான் தேவையான சமயத்தில் டீமேட்டில் இருப்பதை பணமாக்க முடியாது.

பாதிக்கப்பட்டவர்கள் என பார்த்தால் சூதாட்ட நோக்கத்தில் ஒரு மாதத்தில் இரண்டு மடங்காக்கிவிடலாம் அது இது என சந்தையை பற்றி தெரியாமல் மற்றவர்களின் ஆலோசனை பெயரில் சந்தையில் என் புருசனும் கச்சேரிக்கு போறான் என இறங்கியவர்களே.

ஈக்விடி என்பது உங்களுக்கு நீங்கள் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தில் உள்ள உரிமையை குறிப்பது உங்களிடம் உள்ள பங்கின் அளவை பொறுத்து. முதலீட்டு நோக்கோடு மட்டும் சந்தையை அணுகுங்கள்.

பொறுமை காக்கும் நேரம் இது - தென்றல்.

Posted in Labels: |