வரலாற்றை திரும்பி பார்ப்போம் - 2
Posted On Thursday, October 18, 2007 at at 11:48 PM by மங்களூர் சிவாஇது ஜூன் 4 , 2006 ல் வெளியான பதிவு முத்து தமிழினி என்பவர் எழுதியது.
சில நாட்களுக்கு முன் இந்திய பங்கு சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. நிதி அமைச்சர் சிதம்பரம் தலையிட்டு கவலைப்பட ஒன்றுமில்லை என்று அறிக்கை விட்டார்.ஒவ்வொரு முறை பங்கு சந்தை விழும்போதும் சிதம்பரம் இவ்வாறு அறிக்கை விடுவது வாடிக்கையாகிவிட்டது.ஒரு நிதி அமைச்சர் இவ்வாறு தலையிட்டு கருத்து கூறுவது சரியா என்பது ஒரு புறமிருக்க கம்யூனிஸ்டு தலைவர்கள் விடும் அறிக்கைகளால்தான் பங்கு வர்த்தகம் சரிவை சந்திப்பதாக ஒரு சாரார் கூறிவருகின்றனர்.
வெளியிலிருந்து பார்க்கும் கோயிஞ்சாமியாக எனக்கு தோன்றும் சில சந்தேகங்களை வைப்பதுதான் என் நோக்கம். பங்கு குறியீட்டு எண் வரலாறு காணாத அளவு ஏறிக்கொண்டே சென்றபோது பத்தாயிரம் எல்லாம் கம்மி என்றும் பதினாறாயிரம் வரை இந்த வருடமே ஏறும் என்றெல்லாம் பல வல்லுனர்களும் கருத்துக்கூறி வந்தனர்.இந்திய பொருளாதாரம் அந்த அளவு வலிமை வாய்ந்தது என்றெல்லாம் பல ஆதாரங்களை அள்ளிவிட்டு இவர்கள் கருத்துக்கூறி வந்தனர்.
கடந்த சில வாரங்களாக பங்குகள் சரிய ஆரம்பித்தவுடன் இவர்கள் கூறுவது என்னவெனில் மும்பை சென்செக்சின் உண்மையாக மதிப்பு 7800 - 8000 புள்ளிகள்தான் என்றும் இப்போது இருக்கும் 10000+ புள்ளிகள் நிலையே அதிகம் என்கிறார்கள். அரசியல் வாதிகள் கணக்காக பொருளாதார மேதைகளும் உளறிகொட்டுவதை பார்க்க மிக காமெடியாக உள்ளது.பங்கு மார்க்கெட் ஐந்தாயிரம் புள்ளிகளை தாண்டுமபோதே ரீடெய்ல் இன்வஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் நம்மை போன்ற கோவிஞ்சாமிகளில் பலர் பங்குகளை விற்றுவிட்டார்கள்.பிறகு மார்க்கெட் நன்றாக ஏறியபின் உள்ளே நுழைந்த கோவிஞ்சாமிகள் பலர் கையை சுட்டுகொள்வது எதிர்ப்பார்க்கக்கூடியதே.
இப்போது கோயிஞ் சாமிகளான நாம் எந்த நிலையை எடுப்பது? சிதம்பரம் சொல்கிறார் என்று பங்குகள் வாங்குவதா ?நாக்கில் நரம்பில்லாமல் பேசும் இந்த பொருளாதார மேதைகளை நம்பி இவர்கள் அழும்போது அழுவதும் இவர்கள் சிரிக்கும்போது சிரிப்பதும் நமக்கு தேவையா?இன்னொரு புறம் வெளிநாட்டு பணம் ஏகப்பட்டது இந்தியாவில் வந்து குவிந்து இதனால் செயற்கையாக ஏற்றப்பட்டதுதான் பங்கு வர்த்தகம் என்ற கருத்தும் நிலவுகிறது.அதுவும் உண்மை என்றுதான் தோன்றுகிறது.
கடந்த சில வாரங்களில் மிகப்பெரிய தொகையை இந்த வெளிநாட்டு வியாபாரிகள் வெளியே எடுத்துள்ளார்கள். இதற்கே பங்கு மார்க்கெட் ரணகளமாகி உள்ளது. இந்த அழகில் பென்சன் நிதியை பங்கு மார்கெட்டில் முதலீடு செய்ய{இப்போதைக்கு ஐந்து சதவீதத்தை மட்டும்} அரசாங்கம் நினைப்பதாகவும் அதற்கு கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அரசாங்கம் அலுத்துக்கொள்கிறது.
வழக்கம் போல் ஆங்கில மீடியாக்கள் ரொம்ப ஃபீல் செய்கின்றன.(இந்தியாவில் உள்ள ஆங்கில மீடியாக்களை போல் அயோக்கியர்கள் யாரும் இல்லை என்பது என் சொந்த கருத்து}.வயதான காலத்தில் நிம்மதியாக வாழ்வது என் ஒரே அடி்ப்படையில்தான் பென்சன் முதலான சலுகைகளை நம்பி சம்பளம் குறைவு என்றாலும் அரசாங்க வேலையில் சேர்கிறார்கள். இந்த பென்சன் பணத்தையும் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து யாரோ சாப்பிட்டுவிட்டு சென்றால் அது யாருக்கு லாபம்? எத்தனையோ அரசாங்க பாண்டுகள், செக்யூரிட்டுக்கள் ஆகியவை பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளை அளிக்கின்றன.
இதனால்தான் கம்யூனிஸ்டுகள் இதை எதிர்க்கிறார்கள்.அவர்கள் இருப்பும் நாட்டிற்கு அவசியம்தான் என்று தோன்றுகிறது.இந்த அழகில் கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி என்று நமது ரூபாயை எங்கு வேண்டுமானாலும் மாற்றக்கூடிய அளவில் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சிதம்பரம் அண்ட் கம்பெனி மன்னாரு அண்ட் கம்பெனி கணக்காக அறிக்கை கொடுக்கிறது.
நல்லவேளை இதை ஏற்கனவே பல பொருளாதார நிபுணர்கள் எதிர்த்து உள்ளனர். பணவீக்கவிகிதம் என்று கூறி அரசாங்கம் வாரவாரம் ஒரு அறிக்கை வெளியிடுகிறது.இதன் அடிப்படையில் பல பொருளாதார முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த மதிப்பீட்டையே குறைகூறியும் அரசாங்கம் அதில் தகிடுதத்தம் செய்கிறது என்று கூறியும் ஒரு கட்டுரையை நான் படித்தேன்.என்ன நடக்கிறது இந்த நாட்டில்?கோவிஞ்சாமிகளை காப்பாற்றுவது யார்?
இந்த பதிவிற்க்கு திரு. செல்லமுத்து குப்புசாமி எழுதிய பின்னூட்டம்
நிதியமைச்சர் ஒருவர் தினசரி பங்கு விலைகளைக் கண்காணித்து அறிக்கை விடுவது பேரவலம். அவருக்கு இதனை விட முக்கியப் பொறுப்புகள் இருக்குமெனக் கருதுகிறேன்.
விலை உயரும் போது மார்தட்டும் சந்தைகள் (BSE & NSE), செபி, அரசு, அந்தந்த நிறுவனங்கள் எல்லாம், விலை சரியும் போது வேறு காரணங்களைத் தேடுகின்றனர். அதுவும் ஒரு அவலம். கிரிக்கெட் மேட்ச் ஜெயிக்கும் போது ஆட்டக்காரர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் மறக்கப் படுகின்றன. அதே சமயத்தில் அணி தோல்வியைச் சுவைக்கும் போது, சிறப்பான ஆட்டம் கூட விமர்சிக்கப் படுகிறது.
அதே போலத் தான் பங்குவிலையும்.. ஏறும் போது இறங்கும் போதும் அதற்குக் காரணம் கற்பிப்பதற்காத்தான் மிகப் பெரிய கூட்டம் கழுத்தில் 'டை'யைக் கட்டிக் கொண்டு சி.என்.பி.சி.யில் இரைச்சலைக் கிளப்புகிறது.
பிறரது ஆலோசனையின் பேரிலோ அல்லது சுய முடிவின் அடிப்படையிலோ நாம் முதலீடுகளைச் செய்து விட்டு அரசாங்கம் விலையச் சரியாமல் பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அறிவீனம் மட்டுமில்லாது பேராசையும் கூட.
Warren buffett once said, "Stock market is somewhat like a god. He rewards when you do good things. But, unlike real god he does not forgive on mistakes; rather punishes hard".
முத்து, நீங்கள் திறந்த வெளிச் சந்தை அமைப்பை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதாகவும், பொதுவுடமைத் தனத்தை மாற்றமின்றி ஏற்பதாகவும் அறிகிறேன். அது குறித்து விவாதிக்க இங்கே இடம் போதாது. தனியாக வைத்துக் கொள்ளலாம்.
கேபிடல் அக்கவுண்ட் கன்பர்டபிளிட்டி' குறித்தான் உங்களது பார்வை என்னை மகிழச்செய்கிறது. தமிழ்மணத்தில் இது போன்ற விடயங்களை விவாதிக்க எவருமில்லை என எண்ணியிருந்தேன்.
Fundamental analysis & technical analysis என எத்தனை இருந்தாலும் maas psycology தான் சந்தையை இயக்குகிறது. 2005 மே மாதம் முதல் 2006 மே வரை சென்செக்ஸ் நிறுவனங்களின் செயல்பாடு சுமார் 25% (அதிகபட்சமாக) உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் குறியீடு 6,000 இல் இருந்து 12,000 ஐத் தொட்டது.
இதையெல்லாம் பார்க்காமல் சூதாடி விரலைச் சுட்ட பின் பிறரைக் குறை சொல்வது ஆரோக்கியமானதல்ல. குறியீடு உச்சத்தில் இருக்கும் போது இந்தியப் பங்குகளில் பணம் போட்ட (விரலைச் சுட்ட) அந்நிய முதலீட்டு நிறுவனங்களும் இல்லாமலில்லை. ஆனால் அவர்களது மொத்த நிதியில் அது சிறிய விழுக்காடாகவே இருந்திருக்கும். இன்னும் நிறையப் பேசலாம்.. இப்போதைக்கு இது போதும்..
இன்று மட்டுமின்றி என்றுமே, பணவீக்கத்தை விட, வங்கிகள் தரும் வட்டியை விட நீண்ட கால அடிப்படையில் பங்கு முதலீட்டில் (not trading & speculation) அதிகமான வளர்ச்சியை ஈட்ட முடியும் என நம்புகிறேன். அதற்காக நிரம்ப உழைக்க வேண்டியிருக்கும்.
-குப்புசாமி செல்லமுத்து