இன்சூரன்ஸ்

நூறு கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் ஆயுள் காப்பீடு செய்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடி மட்டுமே. அந்த இரண்டுகோடி மக்களிலும் பாதிக்கு மேற்பட்ட மக்கள் ஆயுள் காப்பீடு செய்து கொள்வதை ஒரு வகையான சேமிப்பாக - முதலீடாக, வரிச்சலுகை பெறுவதற்கான வசதியாக கருதிதான் அதில் பணம் போடுகிறார்கள்.

ஆயுள் காப்பீடு ஏஜென்ட் தொடர் தொந்தரவுக்காக மட்டும் பாலிஸி எடுப்பவர்களும் உண்டு. லைஃப் இன்ஸ்யூரன்ஸ் என்பது நமது குடும்பத்தினருக்காக நம்மை நம்பி இருப்பவர்களுக்காக நாம் செய்கின்ற கடமை. அவர்களுக்காக கண்ணியமாக நாம் செய்கின்ற செலவு அது.

அது நிச்சயமாக ஒரு முதலீடோ அல்லது சேமிப்போ கிடையாது. இன்றைக்கு இன்ஷுரன்ஸ் எல்லாவற்றிற்க்கும் வழங்கப்படுகிறது. நமது உயிர்,உடமை,தொழில் ஏன் நமது உடல் உறுப்புக்களைக்கூட இன்சூர் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. இந்தியாவில் 13 பொது துறை இன்ஷுரன்ஸ் கம்பெனிகளும் மற்றும் பல தனியார் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் உள்ளன.

மரணம் என்றோ ஒரு நாள் நம் வாசலைத் தட்டும். அது இன்றாகவும் இருக்கலாம். மரணம் நிச்சயம் என்பதைத் தவிர வேறு எதுவும் நிச்சயம் இல்லை. தனது வருமானத்தினாலேயே தனது குடும்பத்தின் வாழ்வச்சு சுழல்கிறது என்ற நிலையில் இருக்கும் குடும்பத் தலைவர்கள்கூட ஒருவேளை எனது மரணத்திற்குப் பிறகு எனது குடும்பத்தின் நிலை என்ன என்று ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம்கூட சிந்திப்பதில்லை.

ஆயுள் இன்சூரன்ஸின் தேவையை உணர்ந்து இன்ஷுரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொள்பவர்களில்கூட 40 சதவீதத்தினருக்கும் மேற்பட்டவர்கள் அந்த பாலிஸியைத் தொடர்வதில்லை. இதற்கான காரணம் பெரும்பாலானவர்கள் எண்டோமென்ட் பாலிஸி எடுக்கிறார்கள். ஏஜெண்டுகளும் அவர்களுக்கு எண்டோமெண்ட் பாலிஸிகளில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக கமி­சன் கிடைக்கிறது என்பதற்காக அவற்றையே பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்; இந்த ரக பாலிஸி எடுத்தால் பாலிஸி காலம் முடியும்போது நீங்கள் கட்டிய பணம் போனஸுடன் திரும்பக் கிடைக்கும் என்று ஒரு பெருந்தொகையைச் சொல்வார்கள். பொருளாதாரம் படித்தவர்கள்கூட அவர்கள் சொல்வதைப் பரிசீலனை செய்து பார்ப்பதில்லை என்பது விந்தைதான்.

வங்கியில் பிக்ஸட் செய்கிற பணத்திற்கு என்ன வட்டி கொடுப்பார்களோ, ஏறக்குறைய அதே வட்டிதான் போனஸாக எண்டோமெண்ட் பாலிஸிமூலமாக நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவினுடைய சராசரி பணவீக்கமான (Money Inflation) 5 சதவிகிதத்தை கணக்கில் எடுத்துப் பார்த்தால் நமக்கு அவர்கள் எண்டோமென்ட் பாலிஸியின் கால முடிவில் கிடைப்பதாகச் சொல்லும் பணம் ஏறக்குறைய நாம் பிரிமியமாக செலுத்துகின்ற பணத்தின் இன்றைய மதிப்பின் அளவில் மட்டுமே அன்றைக்கு இருக்கும் என்பது புரியும்.

நாம் பியூர் ரிஸ்க பாலிஸிகளையே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கட்ட வேண்டிய பிரிமியம் எண்டோமெண்ட் பாலிஸி பிரிமியத்தை விட பல மடங்கு குறைவு. ஆனால் இதில் பிரிமியமாக செலுத்தப்படுகிற பணம் திரும்பக் கிடைக்காதுதான். இருப்பினும்கூட பாலிஸிதாரர் பாலிஸி காலத்தில் மரணம் அடைந்தால் ஒரு பெரும் தொகை அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கும்.

நமது காருக்கு நாம் இன்ஷுரன்ஸ் எடுக்கும்போது... நமது கார் ஆக்ஸிடெண்ட் ஆகவில்லை என்றால் பிரிமியமாக செலுத்திய பணம் வீணாகப் போய்விடுமே என்று கருதுவதில்லை. விலை மதிப்பற்ற நமது உயிருக்கு பியூர் ரிஸ்க் இன்ஸ்யூர் (Pure Risk Insure) செய்து கொள்ளும்போது பிரிமியமாகச் செலுத்தும் பணம் தண்டம் என்று கருதுவது, கண்ணியமான சிந்தனை இல்லை. இன்ஸ்யூரன்ஸ் என்பது சேமிப்போ, முதலீடோ இல்லை. நான் அப்படித்தான் கருதுவேன்....

Posted in Labels: |